search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வடகிழக்கு பருவ மழை"

    ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அடுத்த வேளியநல்லூர் கிராமத்தில் ஜாகீர்தண்டலம் ஏரி நிரம்பி விளை நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது.

    வேலூர்:

    வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தொடர்ந்து பெய்து வருகிறது. வேலூர் மாவட்டத்தில் நேற்று காலை முதல் மழை இல்லாத சூழலில், இன்று காலை பரவலாக மழை பெய்தது. வேலூர் உட்பட பல மாவட்டங்களில் அதிக கனமழை பொழியும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

    வேலூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக கடந்த ஒரு வாரத்தில் 49 ஹெக்டேர் பயிர்கள் சேதமாகியுள்ளது. 3 பேர், 3 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 93-க்கும் மேற்பட்ட கூரை மற்றும் ஓட்டு வீடுகள் முழுவதுமாகவும் பகுதி அளவும் சேதமடைந்துள்ளது.

    வேலூரின் முக்கிய ஆறுகளான பாலாறு மற்றும் பொன்னை ஆறு, கவுண்டன்ய மகா நதியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மீட்கப்படும் மக்களை தங்க வைக்க 27 முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் மழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அவலூர் கிராமத்தில் 2 ஏக்கர் பரப்பளவில் நெல் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன.

    மாவட்டம் முழுவதும் கனமழை காரணமாக சேதமடைந்த விளைபயிர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டுவருகிறது.

    தற்போது நெமிலி, வாலாஜா, ஆற்காடு, திமிரி உள்ளிட்டபகுதிகளில் இதுவரை 48 ஹெக்டேர் நெல்பயிர் மற்றும் 10 ஏக்கர் வரை உளுந்து, கரும்பு மற்றும் எண்ணெய்வித்துப் பயிர்கள் உள்ளிட்ட விளைபயிர்கள் சேதமடைந்துள்ளது. தொடர்ந்து சேதம் குறித்து கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.

    ராணிப்பேட்டை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் லட்சுமி பிரியா பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மழை வெள்ளத்தால் பாதிப்பு அடையும் விவசாய பயிர்கள் குறித்து தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் எதிர்வரும் மழை எச்சரிக்கை நாட்களிலும் கண்காணித்து அறிக்கையை தயார் செய்து அளிக்க வேண்டும். பயிர் காப்பீடு செய்யப்பட்ட விவரங்களையும் விவசாயிகளிடமிருந்து பெற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும். என தெரிவித்தார்.

    இதனைத்தொடர்ந்து ஓச்சேரி கோவிந்தவாடி ஏரிக்கு அணைக்கட்டில் இருந்து கால்வாயில் செல்லும் தண்ணீரை பார்வையிட்டு தண்ணீர் செல்லும் ஏரிகள் குறித்து கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வின்போது கலெக்டர் பாஸ்கர பாண்டியன், போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன், வேளாண்மை இணை இயக்குனர் வேலாயுதம் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

    ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அடுத்த வேளியநல்லூர் கிராமத்தில் ஜாகீர்தண்டலம் ஏரி நிரம்பி விளை நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதில் சுமார் 100 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது.

    அறுவடைக்கு தயராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். 

    வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியுள்ள நிலையில் அடுத்த 2 நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை மைய இயக்குநர் தெரிவித்துள்ளார். #NortheastMonsoon #Rain
    சென்னை:

    தென்மேற்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21-ந்தேதி முடிவுக்கு வந்தது. அதன் பிறகு வடகிழக்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் உருவான புயல்கள் காரணமாக காற்றின் போக்கு திசை மாறியதாலும், ஈரப்பதம் குறைந்ததாலும் வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

    நவம்பர் 1-ந்தேதி பருவமழை தொடங்குவதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்து இருந்தது.

    அதற்கேற்ப கடந்த சில நாட்களாக தென்மேற்கு வங்கக்கடல் முதல் தெற்கு ஆந்திராவின் மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதி வரை காற்றழுத்தம் நிலவுகிறது.

    இதேபோல் இலங்கை அருகே தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. மேலும் தென் தமிழகத்தில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இதன் காரணமாக தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக பருவ நிலையில் மாற்றம் ஏற்பட்டு பரவலாக மழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களில் பலத்த மழை கொட்டி வருகிறது. சென்னையிலும் 3 நாட்களாக மழை நீடிக்கிறது.

    இதையடுத்து வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியதாக சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.



    அடுத்த 2 நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும். சென்னையில் விட்டு விட்டு பரவலாக மழை பெய்யும். ஒருசில இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ள தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்பிறகு தென் தமிழகம் மற்றும் உள் மாவட்டங்களிலும் பருவ மழை பெய்யும். தொடர்ந்து ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களுக்கும் பரவும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக புழலில் 11 செ.மீ. மழை பெய்துள்ளது. சென்னையில் விட்டு விட்டு பலத்த மழை பெய்வதால் கடந்த 3 நாட்களாக பருவ நிலை மாறி இதமான குளிர் நிலவுகிறது.

    இதற்கிடையே இலங்கை அருகே நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதியானது தீவிரம் அடைந்து புயலாக மாறும் வாய்ப்பு உள்ளதாகவும் தீபாவளியன்று பலத்த காற்றுடன் மழை பெய்யும் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.

    தற்போது தொடங்கியுள்ள வடகிழக்கு பருவ மழையால் அடுத்த 2 நாட்களுக்கு 3-ந்தேதி வரை சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும். ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்யும். உள் மாவட்டங்களில் சில இடங் களில் மழை பெய்யும்.

    இலங்கைக்கு கிழக்கே தற்போது குறைந்த காற்றழுத்தம் நிலை கொண்டுள்ளது. அது வடமேற்கு திசையில் தமிழகத்தை நோக்கி நகரும் போது மேலும் வலுப்பெற்று புயலாக மாறும் வாய்ப்பு உள்ளது. வரும் 6-ந்தேதி தீபாவளி பண்டிகையன்று புயல் காற்றுடன் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை தமிழகத்தில் பரவலாக மழை நீடிக்கும்.

    இவ்வாறு கூறப்பட்டுள்ளது.  #NortheastMonsoon  #Rain
    வடகிழக்கு பருவ மழை இன்னும் 5 நாட்களுக்குப் பிறகுதான் தொடங்கும் வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. #Northeastmonsoon #Rain
    சென்னை:

    சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வடகிழக்கு பருவ மழையின் போதுதான் அதிக மழை கிடைக்கும்.

    வழக்கமாக தென்மேற்கு பருவமழை முடிந்ததும் வட கிழக்கு பருவமழை அக்டோபர் 2-வது வாரத்தில் தொடங்கும். ஆனால் தற்போது பருவ நிலை மாற்றம் காரணமாக வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி, காற்றழுத்தம் காரணமாக இன்று வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் காணப்படும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்து இருந்தது. ஆனால் பருவமழை தொடங்குவதில் மேலும் தாமதம் எற்பட்டுள்ளது. இன்னும் 5 நாட்களுக்குப் பிறகுதான் வடகிழக்கு பருவமழை தொடங்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.



    தற்போது தமிழகத்தையொட்டி மன்னார் வளைகுடா பகுதியில் வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென் தமிழகத்தில் பல இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது.

    இதற்கிடையே வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டியுள்ள மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் வருகிற 29-ந்தேதி புதிதாக காற்றழுத்த பகுதி உருவாகும் வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. #Northeastmonsoon #Rain


    அடுத்த 48 மணி நேரத்தில் வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்தம் உருவாகும் வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. #Northeastmonsoon
    சென்னை:

    தமிழகத்தையொட்டி தென்கிழக்கு மற்றும் அதனையொட்டியுள்ள தென்மேற்கு வங்க கடலில் வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இதேபோல் கேரளாவையொட்டி கிழக்கு மத்திய அரபிக்கடலில் வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.



    இதன் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஒருசில இடங்களில் கனமழை பெய்கிறது.

    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பெரிய குளத்தில் 16 செ.மீ. மழை பெய்துள்ளது. கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் 10 செ.மீ., மழை, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் 6 செ.மீ., சங்கரன்கோவிலில் 5 செ.மீ. மழை பெய்துள்ளது.

    ஸ்ரீவில்லிபுத்தூர், மேட்டுப்பாளையம், சிதம்பரம், தக்கலை ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ., கழுகுமலை, விருதுநகர், நாகர்கோவில், திருச்செங்கோடு, ராஜபாளையம், போடி, மணியாச்சியில் தலா 3 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

    தென்மேற்கு பருவ மழை வடநாட்டின் பல பகுதிகளில் வாபஸ் ஆகிவிட்ட நிலையில் எஞ்சியுள்ள ஒருசில இடங்களில் இன்று விலகிக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    24 மணி நேரத்தில் அதன் பிறகு வடகிழக்கு பருவ மழை தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    அதற்கிடையே தாய்லாந்து வளைகுடாவில் நிலவும் மேலடுக்கு சுழற்சியானது. வடக்கு அந்தமான் கடல் வரை பரவி இணைந்துள்ளது.

    இதன் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்தம் உருவாகும் வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. #Northeastmonsoon

    தென்மேற்கு பருவ மழை தொடர்ந்து நீடித்து வருவதால் வடகிழக்கு பருவ மழை அக்டோபர் 2-வது வாரத்தில் தொடங்க வாய்ப்பு உள்ளது. #SouthWestMonsoon #NortheastMonsoon
    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

    வெப்ப சலனம் மற்றும் தென் கிழக்கு வங்கக்கடலில் நீடிக்கும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று பல இடங்களில் மிதமானது முதல் இடியுடன் கூடிய மழை பெய்யும், கன்னியாகுமரி, காரைக்கால், நாகப்பட்டினம், விழுப்புரம், பாம்பன், ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.



    சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் லேசான மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும். அதிகபட்ச வெப்ப நிலை 93.2 டிகிரி ஆகவும், குறைந்தபட்ச வெப்ப நிலை 78.8 டிகிரியாகவும் இருக்கும். தென் கிழக்கு வங்கக் கடலில் நீடிக்கும் வளி மண்டல மேலடுக்கு சுழற்றி வலுபெறவில்லை. ஆனாலும் வெப்ப சலனம் காரணமாக மழை நீடிக்கிறது.

    கடந்த 24 மணி நேரத்தில் கோபியில் அதிகபட்சமாக 80 மி.மீ. மழை பெய்துள்ளது. சத்திரப்பட்டி, ஒட்டன்சத்திரத்தில் 60 மி.மீ. மழையும், உடுமலைப்பேட்டை, தாளவாடியில் 50 மி.மீ. மழையும், தாராபுரம், பொள்ளாச்சி, காங்கேயத்தில் 40 மி.மீ. மழையும், கொடைக்கானல், தென்காசி, அரவக்குறிச்சி, பேச்சிப்பாறை, ஊட்டியில் 30 மி.மீ. மழையும் பெய்துள்ளது.

    தென்மேற்கு பருவ மழை தொடர்ந்து நீடித்து வருகிறது. தென்மேற்கு பருவ மழை முடிவடைந்ததும் அக்டோபர் 2-வது வாரத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

    இவ்வாறு அவர்கள் கூறினர். #SouthWestMonsoon #NortheastMonsoon


    ×